துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



Thuraiyur Perumal Malai


"தென் திருப்பதி" அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில், பெருமாள் மலை, துறையூர்.


Thuraiyur Perumal Malai


அமைவிடம்:
கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒருபகுதியாக விளங்கும் 27கி.மீ. நீளம் உள்ள கொல்லிமலை தொடரில் பச்சைமலை, குறிச்சிமலை, பெருமாள்மலை ஆகியவை உள்ளன. இக்குன்றுகளில் ஒன்றான பெருமாள் மலையில்தான் கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம் கொண்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமண கோலத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி சேவை சாதிக்கிறார். துறையூரில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் பெரம்பலூர் சாலையில் உள்ளது பெருமாள் மலை. அடிவாரத்தில் இருந்து 5 கி.மீ. மலைப்பாதை (Ghat Road)யில் கார், வேன் மூலம் இத்தலத்தை சென்றடையலாம்.

பூமி மட்டத்தில் இருந்து 960 அடி உயரத்தில் இத்தலம் மலைமேல் அமைந்துள்ளது. படிக்கட்டுகளின் வழியாக சென்றால் 1532 படிக்கட்டுகளையும் ஏழு சிறிய குன்றுகளையும் தாண்டிச் சென்று இத்தலத்தை அடையலாம்.

வரலாறு:

சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த தலம் பெருமாள் மலைக்கோயிலாகும். இத்திருத்தலம் சோழ மன்னருள் ஒருவரான கரிகாற்சோழ பெருவளத்தானின் பேரன் ஒருவரால் கட்டப்பட்டதாகும். தனது குருவின் திருமந்திர உபதேசம் பெற்று, இறைவனடி சேருவதற்காக, தனது ஆட்சி எல்லைக்கருகாமையில் இருந்த இந்த மலையில் ஓர் இலந்த மரத்தின் அடியில் இருந்து இறைவனை வேண்டி தவம் செய்தான். இறைவன் அவனது தவ வலிமையைப் பாராட்டி, அவன் முன் சங்கு, சக்ராயுதபாணியாக காட்சியளித்தார். மன்னன் வேண்டுகோளை ஏற்று அவர் எப்போதும் தன்னை தரிசித்த வண்ணம் இருப்பதற்காக திருமண கோலத்துடன் எழுந்தருளினார். தமக்கு வலபுறமும், பெரிய பிராட்டிக்கு இடதுபுறமும் மன்னரை தலநாயகராக இருக்க பெருமாள் அருள்புரிந்ததாக கூறப்படுகிறது. அந்த தலநாயகர்தான் தற்போதும் கருப்பண்ணசுவாமி என்றும், வீரப்பசுவாமி என்றும் சிறப்புப் பெயர்களால் வழிபடப்பட்டு வருகிறார்.

15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அருணகிரிநாத சுவாமிகள் தமது திருப்புகழில் இத்துறையுரை சிறப்பித்து
“சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ரரூக்கிட
சூர்விற்கதிர் வேல்விட்டருள் விரன்வீரா
தோகைச் செயலான் போர்பிரகாசக் குறமான் முத்தொடு
சோதித்துறையூர் நந்திய பெருமானே!”

என பாடியுள்ளார்.

பெருமாள் சன்னிதியிலும், தாயார் சன்னிதியிலும் துளசியும், தீர்த்தமும், தேங்காய் துருவலும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கருப்பணர் சன்னதியில் விபூதிப் பிரசாதம் வழங்கப்படுவது இங்கு விசேஷமாகும். திருப்பதி - திருமலை ஏழுமலையான் தனக்குச் செலுத்த வேண்டிய காணிக்கைகளையும், நேர்த்திக் கடன்களையும் தென் திருப்பதியாம் பெருமாள் மலையில் தானே பிரசன்னமாக அமர்ந்திருக்கும் இத்தலத்தில் செலுத்த பணித்துள்ளதால், ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து பெருமாளை வழிபட்டு பிரார்த்தனைகளை செலுத்திச் செல்கின்றனர்.

மலைக்கோயிலில் உள்ள தசாவதார மண்டபத்தில் உள்ள தூண்களில் தசாவதார சிற்பங்கள் எழிலுடன் அமைந்துள்ளன. நான்கு இசைத்தூண்களில் உண்டாகும் சப்தஸ்வரங்கள் பிரமிப்பையூட்டு கின்றன. அருளாளர்களைக் கொண்டு உபயமாக சேவார்த்திகளின் வசதிக்காக பெருமாள்மலை அடிவாரத்தில் இருந்து 5கி.மீ நீளத்திற்கு மலைப்பாதை ஒன்று (Ghat Road) சுமார் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேலான மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. 1.5 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வசதி செய்துதரப்பட்டுள்ளது.

மேற்கண்ட திருப்பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டு அஷ்டபந்தன மகாசம்ரோட்சணம் 29-4-88 வெள்ளிக்கிழமை காலை அதிவிமரிசையாக நிகழ்த்தப்பட்டுள்ளது. 'தென் திருப்பதியாம்' பெருமாள் மலையில் பிரசன்னமாகி அருள்புரியும் பிரசன்ன வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவி, அலமேலு மங்கை தாயார், கருப்பண்ணார் ஆகியோரை வழிபட்டு வாழ்வில் நலம் பல பெறுவோம். தற்போது மார்ச்சு 2004க்குள் மகாசம்ரோட்சணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

துறையூரில் உள்ள கோயில்களில் இது தனிச் சிறப்புவாய்ந்தது. ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்யசேத்திரங்களாகிய திருமால் கோயில்கள் 108 என்று வரையறுக்கப்பட்டிருந்தபோதிலும், அவைகளைத் தவிர அடியார்களது இன்னல்களைக் களைந்து, வேண்டுவன தந்து தனிப்பெருமை கொண்டதுமான புண்ணிய தலங்கள் ஆங்காங்கு மிகுந்து விளங்குகின்றன. அவ்வாறு தனிச்சிறப்பு கொண்டது குணசீலம், தான்தோன்றிமலை, நயினார்மலை, நாமக்கல், துறையூர் பெருமாள் மலை முதலிய திருத்தலங்கள் ஆகும்.

இத்திருக்கோயிலின் கருவறையில் பூமகள் நிலமகளோடு நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி கிழக்கு நோக்கி கம்பீரமாக சேவை சாதிக்கின்றார். அவருக்கு வலப்புறத்தில் அலமேலுமங்கைத்தாயார் சன்னதி உள்ளது. அதனை அடுத்து இலந்தை மரத்தின்கீழ், சேத்திர பாலகர் என்ற கருப்பண்ணார் சன்னதி உள்ளது. பெருமாள் சன்னதிக்கு இடப்புறத்தில் பத்மாவதி தாயார் சன்னதியும், மற்றும் ஆழ்வார்கள், சேனை முதல்வர்களின் சன்னதிகளும் உள்ளன. கருப்பண்ணார் சன்னதியில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. இவரை குலதெய்வமாகக்கொண்ட குடிமக்கள் ஏராளமாக உள்ளனர். பெருமாள் சன்னதிக்கு முன்புறம் மகாமண்டபத்தை அடுத்த சோபான மண்டபத்தின் தூண்களில் திருமாலின் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம், ராம, பலராமர், கிருஷ்ணர், கல்கி என தசாவதாரங்களையும், ரங்கமன்னர் (ஸ்ரீவில்லிப்புத்தூர்) ராஜமன்னார் (மன்னார்குடி) ஆகிய திருமால் வடிவங்கள் அழகுற காட்சிதருகிறது. தசாவதாரங்களில் 16 கரங்களுடன் ஹிரண்யனை தன்மடிமீது வைத்து சம்ஹாரம் செய்யும் நரசிம்மர் கோலம் மிகவும் அற்புதமானது.

இம்மண்டபத்தில் காணப்படும் 4 பெரிய தூண்களில், ஒவ்வொரு தூணிலும் 8 சிறிய தூண்கள் காணப்படுகிறது. இதனை தட்டினால் இசை ஒலி ஏற்படுகிறது. இசைத்தூண்கள் என்று இதனைக் கூறுவார்கள். திருச்சி மாவட்டத்தில் அரியலூர் கோதண்டராமசுவாமி கோயிலிலும் இதுபோன்று திருமாலின் தசாவதார உருவங்களை தூண்களில் காணமுடிகிறது.

இசைத்தூண்கள் (Musical Pillars) பொதுவாக நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட மண்டபங்களில் காணலாம். தமிழ்நாட்டில் மதுரை, தாடிக்கொம்பு, திருநெல்வேலி போன்ற பல கோயில்களில் இத்தகைய இசைத்தூண்களைக் காணலாம். நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கோதண்டம், அம்பு ஆகியவை தாங்கி சதுர்புஜ கோதண்ட ராமனையும் கருடனுக்கு அருள்புரியும் பால நரசிம்மனையும் காணலாம். பிற்காலத்தில் துறையூரை ஆட்சி செய்த ஜமீன்தார்கள் இக்கோயிலின் திருப்பணிகளைச் செய்துள்ளனர்.

திருமாலின் பல்வேறு வடிவங்களை அழகிய சிற்ப வடிவங்களாக காட்சி தரும் இத்திருக்கோயில் தென் திருப்பதி' எனப் பெயர் கொண்டு, அன்பர்களின் அபிமானத் தலமாக விளங்குகிறது. புரட்டாசி மாதங்களில் சனிக்கிழமைகளில் பக்தர்கள் இங்கு பெரும் அளவில் வந்து வழிபட்டுபேறு அடையும் சிறப்புத் தலமாக விளங்குகிறது.

பச்சைமலையோரமாக தனி மலையாகக் காட்சிதரும் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் பெருமாள்மலை திருப்பதி மலையைப் போன்று ஏழு குன்றுகளாய் காட்சிதருகிறது. திருப்பதியைச் சுற்றிலும் அமைந்துள்ள கிராமங்கள் போன்று பெருமாள் மலையைச் சுற்றிலும் இருக்கின்றன. குறிப்பாக நாகலாபுரம் என்ற கிராமம் உள்ளது. அடிவாரத்தில் அருள்மிகு கோவிந்தராஜபெருமாள் திருக்கோவிலும் அமைந்துள்ளது மிகச்சிறந்ததாகும். கோவில் மண்டபத்தில் கருடாழ்வார் உருவச்சிலையாய் காட்சிதருகிறார். கருடாழ்வாரை வணங்குவதால் அனைத்து தோஷங்களும் நீங்கிவிடுவதாய் கூறப்படுகிறது. அனைவரும் வருக. எம்பெருமான் அருள்பெறுக.

Share: